வோல்வார்ட், பிரிட்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்கா- இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்பின் இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹாசினி பெரேராவும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 14 ரன்னிலும், ஹர்ஷித்ரா மாதவி 13 ரன்னிலும், நிலாக்ஷி டி சில்வா 18 ரன்னிலும், அனுஷ்கா சஞ்சீவனி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான விஷ்மி குனரத்னே 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மிலாபா 3 விக்கெட்டுகளையும், மசபடா கிளாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு 20 ஓவர்களில் 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களப் பதிவு செய்தும் அசத்தினர். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லாரா வோல்வார்ட் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்களையும், தஸ்மின் பிரிட்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவு செய்ததுடன் அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. அதேசமயம் இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய லாரா வோல்வார்ட் ஆட்டநாயகி விருதை வென்று அசத்தினர்.