மகளிர் ஆசிய கோப்பை 2022: இலங்கையை பந்தாடியது இந்தியா!

Updated: Sat, Oct 01 2022 16:35 IST
Image Source: Google

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மகளிர் - இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஷஃபாலி வர்மா வர்மா 10 ரன்களிலும் மந்தனா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் - ஜெமிமா ரோட்ரிகஸ் அபாரமான கூட்டணியை அமைத்தார்கள். இருவரும் 71 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்கள். 

ஜெமிமா 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஹர்மன்ப்ரீத் 33 ரன்களிலும் ஜெமிமா 76 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இலங்கையின் ஒஷாதி உதேசிகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 5 ரன்களிலும், மல்ஷா ஷெஹானி 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ஷித்தா மாதவி - ஹாசினி பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் மாதவி 26 ரன்களிலும், பெரேரா 30 ரன்களிலும்  ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேமலதா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனால் இலங்கை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை