மகளிர் உலகக்கோப்பை 2022: ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகளாக அலிஸா ஹீலி மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் களமிறங்கினர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். ஒரே ஓவரில் இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹெய்ன்ஸ் 69-வது பந்திலும், 62-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர்.
அரைசதம் கடந்த பிறகு ஹீலி அதிரடிக்கு மாறத் தொடங்கினார். இதனால், ரன் ரேட்டும் உயரத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெய்ன்ஸ் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பெத் மூனி, ஹீலியுடன் சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி 100ஆவது பந்தில் சதத்தை எட்டினார்.
இதன்பிறகு, ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி என்ற வகையில் இருவரும் அதிரடி காட்ட இங்கிலாந்து கடும் நெருக்கடிக்குள்ளானது. பெத் மூனி 38ஆவது பந்தில் அரைசதத்தைக் கடக்க, ஹீலி அடுத்த ஓவரிலேயே 150 ரன்களைத் தாண்டினார். இதனால், அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டியது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீலி 170 ரன்களுக்கு அன்யா ஷ்ரப்சோல் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ஆஷ் கார்ட்னர் 1 ரன்னுக்கு ரன் அவுட் ஆனார்.
கேப்டன் மெக் லேனிங் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்த பந்திலேயே மூனி 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எலிஸ் பெர்ரி இறுதியில் சற்று அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 350 ரன்களைத் தாண்டியது.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெரி 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். தஹிலா மெக்ராத் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஷ்ரப்சோல் 3 விக்கெட்டுகளையும், எக்லெஸ்டோன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் டேனியல் வைட் 4, டாமி பியூமண்ட் 27, கேப்டன் ஹீத்தர் நைட் 26, ஏமி ஜோன்ஸ் 20, சோஃபியா டாங்க்லி 23 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருந்தாலும் 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நடாலி ஸ்கைவர் அதிரடியாக விளையாடி சதமடித்து ஆறுதலளித்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் ஸ்கைவருக்கு ஒத்துழைக்காமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடௌயைக் கட்டினர்.
இதனால் 43.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நடாலி ஸ்கைவர் 148 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அலனா கிங், ஜேஸ் ஜோனசன் தலா 3 விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 7ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.