மகளிர் ஆசிய கோப்பை 2022: யூஏஇ-யை பந்தாடியது இந்தியா!

Updated: Tue, Oct 04 2022 16:54 IST
Image Source: Google

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. சில்ஹெட்டில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ரிச்சா கோஷ்  ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை மேகனா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹேமலதா 2 ரன்களுக்கு அவுட்டானார்.

மூன்றாம் வரிசையில் இறங்கிய தீப்தி ஷர்மா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெமிமா 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று சிறப்பாக முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 178 ரன்களை குவித்த இந்திய மகளிர் அணி, 179 ரன்கள் என்ற கடின இலக்கை ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு நிர்ணயித்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணியில் தீர்த்தா சதிஷ் ஒரு ரன்னிலும், எஸா ரோஹித் 4 ரன்களிலும், நடாசா செரியத் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கவிஷா எகொடகே - குஷி சர்மா இணை டெஸ்ட் போடியைப் போன்று விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதிலும் வெறும் 74 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், இத்தொடரில் ஹாட்ரிக் வெற்றியையும் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை