மகளிர் டி20 சேலஞ்ச்: டோட்டின் அரைசதம்; வெலாசிட்டிக்கு 166 டார்கெட்!

Updated: Sat, May 28 2022 21:11 IST
Image Source: Google

நடப்பாண்டு மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. புனே எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணியின் கேப்டன் தீப்தி சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் பிரியா புனியா - டேண்ட்ரா டோட்டின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரியா புனியா 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த டேண்ட்ரா டோட்டின் அரைசதம் கடந்தார்.

டோட்டினுடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. இதில் டோட்டின் 62 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய பூஜா வஸ்திரேகரும் 5 ரன்களோடு பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 ரன்கள் எடுத்த நிலையில் கேட் கிராஸ் பந்துவீச்சில் ஷஃபாலி வர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.

இதையடுத்து வந்த சோஃபி எக்லெஸ்டோன் 2 ரன்கள் எடுத்த நிலையில் கேட் கிராஸிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சூப்பர்நோவாஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது.

வெலாசிட்டி அணி தரப்பில் கேப்டன் தீப்தி ஷர்மா, கேட் கிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை