ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு விஷ்மி குணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சமாரி அத்தபத்துவும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 18 ரன்களிலும், கவிஷா தில்ஹாரி 10 ரன்களிலும், அனுஷ்கா சஞ்சீவனி 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் நிலாக்‌ஷி டி சில்வா 14 ரன்களையும், அமா காஞ்சனா 10 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லே காஸ்பெரெக் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜார்ஜியா பிளிம்மருடன் இணைந்த அமெலியா கெர்ரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா பிளிம்மர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். பின்னர் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜார்ஜியா பிளிம்மர் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா கெர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமெலியா கெர் 34 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சூஸி பேட்ஸ் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பிலும் நீடித்து வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News