இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
அதன்பின் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் இலங்கை அணியானது ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்திருந்தது. மேற்கொண்டு அந்த அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் காரணமாக, இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடவுள்ளதால், நிச்சயம் அதற்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு அடுத்தடுத்து வெற்றிகளைப் பெறுவது அவசியமாகும் என்பதால், நிச்சயம் இதில் வெற்றிபெற முனைப்பு கட்டும். மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்மன்பிரீத் கவுர் காயமடைந்தார். இதனால் அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டதாகவும், அதில் அவரது காயம் பெரிதளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர்(கே), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங், பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், தயாளன் ஹேமலதா, யாஸ்திகா பாட்டியா.