மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளும் முன்னேறின.
அந்தவகையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜார்ஜியா பிளிம்மர் 9 ரன்களி மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் சூஸி பேட்ஸுடன் இணைந்த அமெலியா கெர் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சோஃபி டிவைனும் 6 ரன்களுடனும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய புரூக் ஹாலிடே வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புரூக் ஹாலிடே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமெலியா கெரும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். இறுதியில் மேடி கிரீன் 12 ரன்களைச் சேர்க்க, நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மலபா 2 விக்கெட்டுகளையும், அயபொங்கா காக்கா, சோலே ட்ரையோன், நதின் டி கிளார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன, முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதான்பின் 17 ரன்கள் எடுத்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் அன்னேக் போஷ் 9 ரன்னிலும், மரிஸான் கேப் 8 ரன்னிலும், நதின் டி கிளார்க் 6 ரன்னிலும், சுனே லூஸ் 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 97 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சோலே ட்ரையான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் விளையாடிய டெர்க்சனும் 10 ரன்களுடன் நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வியும் உறுதியானது.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் மற்றும் ரோஸ்மரி மெய்ர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தியதுடன், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.