மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்மிருதி மந்தா அதிரடி அரைசத; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
அதன்படி செயிண்ட ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரெலிய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதன்பின் 24 ரன்கள் எடுத்திருந்த ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார்.
இதற்கிடையில் அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 13 ரன்களிலும், அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷ் முதல் பந்திலேயும் டெலனி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆனால் இதனையெல்லாம் மனதில் வைக்காமல் ஸ்மிருதி மந்தனா பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மா முதல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ஜெமீமா ரோட்ரிக்ஸ் தனது பங்கிற்கு ஒரு சில பவுண்டரிகளை விளாசி 19 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.