மகளிர் உலகக்கோப்பை 2022: நாளை முதல் தொடர் தொடக்கம்!

Updated: Thu, Mar 03 2022 12:45 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்கி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் என 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது.

மொத்தம் 6 மைதானங்களில் போட்டி நடைபெறுகின்றன. அனைத்து மைதானங்களிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த இந்த தொடர் தற்போது நடைபெற உள்ளது. 8 அணிகளும் ஒரே குரூப்பில் ரவுண்ட் ராபின் முறைப்படி தங்களுக்குள் 7 லீக் போட்டியில் மோதும். இதில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

மகளிர் உலககோப்பை வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 முறையும், இங்கிலாந்து அணி 4 முறையும் , நியூசிலாந்து அணி ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதுவரை இவ்விரு அணிகளை தவிர வேறு எந்த அணியும் உலககோப்பையை வென்றது இல்லை. கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி, கோப்பையை தவறவிட்டது.

இம்முறை இந்திய அணி பலமாகவே உள்ளது. ஸ்மிருமி மந்தானா, மித்தாலி ராஜ்,ஹர்மான்பிரித் கவுர் , கோஸ்வாமி ஆகியோர் அணியின் முக்கிய வீராங்கனைகளாக விளங்குகின்றனர். இளம் வீராங்கனை ஜெமிமா உலககோப்பைக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்மான்பிரித் கவுர், சரியான நேரத்தில் ஃபார்ம்க்கு திரும்பி, பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசினார்.

மேலும் வரும் 6ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இம்முறை நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் போட்டியை எதிர்கொள்வதால் அந்த அணியே உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை