ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடர், இராணி கோப்பை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சையத் முஷ்டாக் அலி தொடர் என்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 21 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேனுக்கான இடம் நிரப்பப்பட்டுள்ளது. புஜாராவின் இடத்தில் ஜெய்ஸ்வாலை களமிறக்க இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதனிடையே சில இந்திய வீரர்கள் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.
கடந்த துலீப் டிராபி தொடரின் போது, ரஹானே தலைமையில் ஜெய்ஸ்வால் விளையாடினார். அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ரவி தேஜாவை ஜெய்ஸ்வால் எல்லை மீறி ஸ்லெட்ஜிங் செய்தார். இதனால் கோபமடைந்த கேப்டன் ரஹானே, யஷஸ்வி ஜெய்ஷ்வாலை உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றினார். இந்த சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி யஷஸ்வி ஜெய்ஷ்வால் பதிலளித்துள்ளார்.
அதில், “கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம். நானும் மனதளவில் ஆக்ரோஷமாக தான் இருப்பேன். ஆனால் அது வெளிப்படையாக தெரியாது. குறிப்பிட்ட சம்பவத்தில் நான் எனது எல்லையில் இருந்து கொண்டே ஸ்லெட்ஜிங் செய்தேன். அதைப் பற்றி பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னை பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது.
சாதாரணமாக தெருக்களில் ஆடப்படும் கிரிக்கெட்டில் கூட ஸ்லெட்ஜிங் இருக்கும். அனைத்து வீரர்களும் ஸ்லெட்ஜிங்கை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால் யாருக்கு எதிராக எந்த வீரர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுகிறார் என்பது முக்கியம். அதேபோல் யாராக இருந்தாலும் தாயை பற்றியோ, சகோதரியை பற்றியோ பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.