WPL 2023: ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்நே ராணா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் மெகனா ரன்கள் ஏதுமின்றியும், லாரா வோல்வார்ட் ஒரு ரன்னுடனும் மரிசேன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த ஆஷ்லே கார்ட்னர் முதல் பந்திலேயும், ஹெமலதா 5 ரன்களிலும் என தங்ளது விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் 20 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்லீன் தியோலும் அட்டமிழக்க, அடுத்து வந்த ஜார்ஜியா 22, சுஷ்மா வர்மா 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கிம் கார்த் - தனுஜா கன்வர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை சிறுக சிறுக உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிம் கார்த் 32 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மரிசேன் கேப் 5 விக்கெட்டுகாளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியான தொடக்கத்தக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஒருமுனையில் கேப்டன் மெக் லெனிங் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஷஃபாலி வர்மா 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 28 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 76 ரன்களையும், மெக் லெனிங் 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.