WPL 2023: இஸி வாங் ஹாட்ரிக்கில் இறுதிப்போட்டிகுள் நழைந்தது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Fri, Mar 24 2023 22:53 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஹெய்லி மேத்யூஸ் இணை வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர். பின் யஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், ஹெய்லி மேத்யூஸ் 26 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இருப்பினும் 3ஆம் வரிசையில் இறங்கிய நடாலி ஸ்கைவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அமெலியா கெரும் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகளை விளாசி 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.இதையடுத்து வந்த பூஜா வஸ்த்ரேகர் மதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் சிக்சரும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் 28 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 72 ரன்களை குவித்து அசத்தினார். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்களைக் குவித்தது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்க வில்லை. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஸ்வேதா ஷ்ரேவாத் ஒரு ரன்னிலும், அலிசா ஹீலி 11 ரன்களிலும், தஹ்லியா மெக்ராத் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் வந்த கிரன் நவ்கிரே ஒரு முனையில் இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனைல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரேஸ் ஹேரிஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிரண் நவ்கிரே 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து இஸி வாங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து வந்த சிம்ரன் சைக், சோபி எக்லெஸ்டோன் ஆகியோரும் இஸி வாங் பந்துவீச்சில் அடுத்தடுத்து முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை இஸி வாங் இன்றையப் போட்டியில் படைத்தார். 

இதையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க யுபி வாரியர்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய இஸி வாங் 4 விக்கெட்டுகளையும், சைகா இஷாக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், மகளிர் பிரீமியர் லிக் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொள்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை