WPL 2023: தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பீரிமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ஹீலி மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யஷ்திகா பாட்டியா - நாட் ஸ்கைவர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 36 ரன்களைச் சேர்த்திருந்த நாட் ஸ்கைவர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்திகா பாட்டியாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து வந்த கேப்டன் ஹர்மனப்ரீத் சிறப்பாக விளையாட, மறுமுனையில் வந்த அமிலியா கெர் 19, இஸி வாங் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியது. அதனைத்தொடர்ந்து மேற்கொண்டு ரன்களைச் சேர்க்காமல் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை சோபியா டங்க்லி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் மேகனா 16 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 22 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, பின்னர் வந்த சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், ஹேமலதா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்நே ராணா - சுஷ்மா வர்மா இணை ஒராளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்நே ரானா 20 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கிம் கார்த், கன்வர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெய்னட்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை மட்டுமே அடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நாட் ஸ்கைவர், ஹீலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிகான இடத்தை உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.