WPL 2023: மும்பை தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது யுபி!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 7 ரன்களிலும், நாட் ஸ்கைவர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய ஹீலி மேத்யூஸ் 35 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அமிலியா கெர் 3, அமன்ஜோட் கவுர் 5 ரன்கள் என ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இஸி வாங் 19 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியில் தேவிகா வைத்யா, அலிசா ஹீலி, கிரன் நவ்கிரே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த தஹ்லியா மெக்ராத் - கிரேஸ் ஹாரிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெக்ராத் 38 ரன்களிலும், ஹாரிஸ் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த தீப்தி சர்மா - சோபி எக்லெஸ்டோன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தங்களது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.