WPL 2024: யுபி வாரியர்ஸை 119 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - வ்ருந்தா தினேஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வ்ருந்தா அரவிந்த் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை தஹ்லியா மெக்ராத்தும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் அலிசா ஹீலியும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, யுபி அணி 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த கிரேஸ் ஹாரிஸ் - ஸ்வேதா ஷெராவத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கிரேஸ் ஹாரிஸ் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கிரண் நவ்கிரே 10 ரன்களுக்கும், பூனம் கெமார் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்வேதாவும் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டோன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் மரிஸான் கேப் 3 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.