WPL 2024: தீப்தி சர்மா போராட்டம் வீண்; யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!

Updated: Mon, Mar 11 2024 22:44 IST
WPL 2024: தீப்தி சர்மா போராட்டம் வீண்; யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

இரண்டாவது சீசன் மகளீர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அந்தவரியில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் பெத் மூனி - லாரா வோல்வார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாரா வோல்வார்ட் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா ரன்கள் ஏதுமின்றியும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 4 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களுக்கும், பாரதி ஒரு ரன்னிலும், கேத்ரின் பிரைஸ் ஒரு ரன்னுக்கும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கடைசி வரை களத்தில் இருந்த பெத் மூனி, ஃபோபி எக்லெஸ்டோன் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. யுபி அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி 4 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சமாரி அத்தப்பத்து ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஷப்னம் ஷகில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை கிரண் நவ்கிரேவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் களமிறங்கிய தீப்தி சர்மா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா ஷ்ராவத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் யுபி வாரியர்ஸ் அணி 35 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - பூனம் கேம்னார் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரையும் உயர்ததினர். இதில் அசத்தலாக விளையாடிய தீப்தி சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில், யுபி வாரியர்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தெவை என்ற நிலை ஏற்பட்டது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த தீப்தி சர்மா 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 88 ரன்களையும், பூனம் கேம்னார் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களையும் சேர்த்த நிலையிலும் யுபி அணியால் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை