WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட்டும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கார்ட்னர் 12 ரன்களுக்கும், லிட்ச்ஃபீல்ட் 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பாரதி - கேத்ரின் பிரைஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்களைச் சேர்த்தனர்.
இதில் அரைசதத்தை நெருங்கிய பாரதி 42 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தனுஜா கன்வெர் ரன்கள் ஏதுமின்றியும், ஷப்னம் ஷகில் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் மரிஸான் கேப், மின்னு மணி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஷஃபாலி வர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிகச்ர்களுமாக விளாசினர். அதேசயம் மறுபக்கம் 4 பாவுண்டரிகளுடன் 18 ரன்களைச் சேர்த்திருந்த மெக் லெனிங் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஷஃபாலியுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 71 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசன் டபிள்யூபிஎல் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மீண்டும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.