WPL 2024: யுபி வாரியர்ஸை 138 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - கிரண் நவ்கிரே ஆகியோர் தொடக்கம் கிடைத்தது.
இதில் கிரண் நவ்கிரே 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அலிசா ஹீலி - தீப்தி சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 29 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய தஹ்லியா மெக்ராத்தும் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ் 14 ரன்களிலும், ஸ்வேதா ஷெராவத் 4 ரன்களிலும், பூனம் கெம்னர் ஒரு ரன்னிலும், சோஃபி எக்லெஸ்டோன் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் யுபி வாரியர்ஸ் அணி 116 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தீப்தி சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த தீப்தி சர்மா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் டைடாஸ் சாது. ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.