இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மெக் லெனிங் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷஃபாலி வர்மா - அலிஸ் கேப்ஸி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிஸ் கேப்ஸி 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த மரிஸான் கேப் மற்று, ஜெஸ் ஜோனசன் இணையும் பவுண்டரிகளாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் டெல்லி அணி 200 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என மரிஸான் கேப் தனது விக்கெட்டை இழந்தார். ஆனலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெஸ் ஜோனசன் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் என 36 ரன்களை விளாசி ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் சோஃபி டிவைன், நாதின் டி கிளார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரில் இருந்தே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ஸ்மிருதி மந்தனா மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களைச் சேர்த்தது. இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் தனது முதல் டபிள்யூபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் தனது அதிரடியைத் தொடங்கிய சோஃபி டிவைன் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இதனால் ஆர்சிபி அணி எளிதாக இந்த இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 24 ரன்கள் சேர்த்திருந்த சோஃபி டிவைன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின்னும் அதிரடி காட்டி அணிக்கு நம்பிக்கைக் கொடுத்து வந்த ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 74 ரன்களைக் குவித்த நிலையில் மரிஸான் கேப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.
பின்னர் களமிறங்கிய மேகனா ஒருபக்கம் விளையாடினாலும், மறுபக்கம் களமிறங்கிய அதிரடி வீராங்கனைகள் ரிச்சா கோஷ் 19 ரன்களுக்கும், ஜார்ஜியா வர்ரேம் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்த மேகனாவும் 35 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்த பந்திலேயே நதின் டி கிளார்க்கும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனான் மூலம் ஆர்சிபி அணியின் தோல்வியும் ஏறத்தாழ உறுதியானது.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெஸ் ஜோனசன் 3 விக்கெட்டுகளையும், மரிஸான் கேப், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.