WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் யஷ்திகா பாட்டியா 9 ரன்களுக்கும், ஹீலி மேத்யூஸ் 4 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நாட் ஸ்கைவர் பிரண்ட் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அமெலியா கெர் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய அமஞ்சோத் கவுர் 7 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமெலிய கெர் 39 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஜனாவும் 22 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணிக்கு அலிசா ஹீலி - கிரண் நவ்கிரே ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரண் நவ்கிரே 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சமாரி அத்தபத்து 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் அலிசா ஹீலி 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த கிரேஸ் ஹாரிஸ் - தீப்தி சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இவர்களது கூட்டணியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதில் கிரேஸ் ஹாரிஸ் 2 சிக்சர்களை விளாசிய கையோடு தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுதடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதேசமயம் ஒருபக்கம் மளமளவென விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் இறுதிவரை களத்தில் நின்று விளையாடிய தீப்தி சர்மா 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும் மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சைகா இஷாக் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸகைவர் பிரண்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.