WPL 2024: ஃபீல்டிங்கில் ஏபிடி வில்லியர்ஸை நினைவு படுத்திய ஜார்ஜியா வேர்ஹாம்; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 46 ரன்களையும், ஜெஸ் ஜோனசன் 36 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 74 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், இப்போட்டியின் போது ஆர்சிபி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் பவுண்டரி எல்லை சிக்சரை தடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி டெல்லி பேட்டர் ஷஃபாலி வர்மா சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை லாங் ஆன் திசையை நோக்கி விளாசினார். அவர் பந்தை அடித்த விதத்தைப் பார்த்து மைதானத்தில் இருந்த அனைவரும் அது சிக்சருக்கு செல்லும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் அச்சயம் அப்பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜார்ஜியா வேர்ஹாம் லாவகமாக தாவி பந்தை பிடித்துடன் தரையை தொடுவதற்கு முன் அதனை மைதானத்திற்குள்ளும் தள்ளிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் முதல் எதிரணி வரை அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர். அவரால் எப்படி இதனை செய்ய முடிந்தது என்ற ஆச்சரியத்துடன் அவருக்கு கைத்தட்டல்களையும் வழங்கினர். இக்காணொளி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கா விளையாடி வந்த முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் இதே போன்று ஒரு பந்தை தடுத்து நிறுத்தினார். கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதாரபாத் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் இதே பாணியில் பந்தை தடுத்து நிறுத்தி அசத்தி இருந்தார். இந்நிலையில் வேர்ஹாம் - டி வில்லியர்ஸ் இருவரும் ஒரே பாணியில் பந்தை தடுக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.