WPL 2024: எல்லிஸ் பெர்ரி அபார பந்துவீச்சு; மும்பையை 113 ரன்களில் சுருட்டியது ஆர்சிபி!
மகளிர் பீரிமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்தை எந்த அணி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி இன்று நடைபெற்றுவரும் முக்கியமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கத்திற்கு மாறாக ஹீலி மேத்யூஸுடன் சஜீவன் சஜனா தொடக்கம் கொடுத்தார். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 43 ரன்களைச் சேர்த்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26 ரன்கள் எடுத்த நிலையில் ஹீலி மேத்யூஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களில் சஜீவன் சஜனாவும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன்கள் ஏதுமின்றியும் என எல்லிஸ் பெர்ரியின் அடுத்தடுத்த பந்துகளில் தனது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர், நாட் ஸ்கைவர் பிரண்ட்,அமஞ்சோத் கவுர், பூஜா வஸ்திரேகர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் எல்லிஸ் பெர்ரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் சாதனையை எல்லி பெர்ரி படைத்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளாலும் ஆர்சிபி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.