இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் டபிள்யூபிஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். சிறப்பாக தொடங்கிய இந்த இணையில் பெத் மூனி 16 ரன்களுக்கும், லாரா வோல்வேர்ட் 28 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 24 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

Advertisement

இதனால் குஜராத் அணி 83 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. 

பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த ஆஷ்லே கார்ட்னர் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களை விளாசி அணியின் நம்பிக்கையாக பார்க்கட்ட போப் லிட்ச்ஃபீல்டும் அதே ஓவரில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.  அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் சோபிக்க தவறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டையும் என கைப்பற்றினர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி யுபி வாரியர்ஸ் அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News