எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வோல் 55 ரன்களையும், கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அமெலியா கெர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹீலி மேத்யூஸ் 68 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 37 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மம்ப்ரீத் கவுர் யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டொனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
யுபி வாரியர்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீச முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணிக்கு அபராதமாக 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே மூன்று வீரர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என நடுவர்கள் கூறினர். இதனால் அதிருப்தியடைந்தா ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பந்துவீச்சாளர் அமெலியா கெர் ஆகியோர் கள நடுவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் பேட்டிங் செய்ய களத்தில் இருந்த யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனும் நடுவரிடம் ஏதோ கூற, அதனால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு எக்லெஸ்டோனும் கோபமாக பதிலளிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அதன்பின் நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்த செயல் ரசிகர்களையும் கோபமடைய செய்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயலுக்கு தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்த செயலானது போட்டி விதிகளுக்கு எதிரானது என்பதால், போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் டபிள்யூபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.