மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வையட்டும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருபக்கம் அபாரமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ராக்வி பிஸ்ட் ஒரு ரன்னிலும், கனிகா அஹுஜா 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் பெர்ரியுடன் இணைந்த ரிச்சா கோஷ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் பொறுப்புடன் விளையாடி வந்த எல்லிஸ் பெர்ரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், ரிச்சா கோஷ் 3 பவுண்டர், ஒரு சிக்ஸர் என 28 ரன்களுக்கும், ஜார்ஜியா வர்ஹாம் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எல்லிஸ் பெர்ரி இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 81 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமஞ்சோத் கௌர் 3 விக்கெட்டுகளையும், ஷப்னைம் இஸ்மையில், நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீலி மேத்யூஸ் மற்றும் சமஸ்கிருதி குப்தா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பறினர்.  

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பட்டியா 8 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நாட் கைவர் பிரண்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹீலி மேத்யூஸ் 15 ரன்களிலும், அரைசதத்தை நெருங்கிய நாட் ஸ்கைவர் 42 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெரும் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கையோடு பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமஞ்சோத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில், 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டையும் இழந்தார். இதனால் அந்த அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்சோத் கவுர் 2 பாவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும், ஜி கமலினி 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News