நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 17 பவுண்டரிகளுடன் 96 ரன்களைச் சேர்த்திருந்தார். மேற்கொண்டு ஹர்லீன் தியோல் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களைச் சேர்த்தார். யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லேஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸுக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அந்த அணியில் அதிகபட்சமாகவே கிரேஸ் ஹாரிஸ் 25 ரன்களையும், சின்னெல்லே ஹென்றி 28 ரன்களையும், உமா சேத்ரி 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் யுபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய யுபி வாரியர்ஸ் கேப்டன் தீப்தி சர்மா, “ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததால், இந்த இலக்கானது துரத்தக்கூடியது தான் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். முதல் நான்கு அல்லது ஐந்து பேர் முன்முயற்சி எடுக்க வேண்டும். கடந்த போட்டியிலும் இதேதான் நடந்தது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் இதை மீண்டும் செய்யக்கூடாது என்று நம்புகிறோம்.
Also Read: Funding To Save Test Cricket
பேட்டர்கள் பார்ட்னர்ஷிப்களில் கவனம் செலுத்த விரும்பினோம். யாராவது கடைசி வரை விளையாடியிருந்தால், நிச்சயம் இந்த இலக்கை எங்களால் துரத்தப்பட்டிருக்கும். நான் உட்பட அணியின் அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து யுபி வாரியர்ஸ் அணி தங்களின் அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.