எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஆஷ்லே கார்ட்னர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியில் கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்களையும், உமா சேத்ரி 24 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், டியாண்டிரா டோட்டின், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி, ஹேமலதா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, நட்சத்திர வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 22 ரன்களையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டியாண்டிரா டோட்டின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும், ஹர்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், “இப்போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி, நாங்கள் மற்ற ஆட்டத்தில் அதிக தூரம் செல்லவில்லை. இந்த வகையான கிரிக்கெட்டை விளையாடுவதும், இன்றைய ஆட்டத்தை சொந்த மண்ணில் வெல்வதும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறது. எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், பிரியா மிஸ்ரா போன்ற ஒருவர் தனது இரண்டாவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது அற்புதமானது.
Also Read: Funding To Save Test Cricket
தனிப்பட்ட மதிப்பீடை பொறுத்தவரையில், ஒவ்வொருவருக்கும் பேட்டிங் செய்ய அவரவர் சொந்த முறை உள்ளது. டோட்டின் தனது முன் காலை பயன்படுத்தி சிக்ஸர்களை அடிப்பதை நீங்கள் உங்களால் பார்க்க முடியும். மேலும் ஹர்லீன் தியோலைப் போன்ற ஒருவர் தனது அணுகுமுறையில் தெளிவாக இருக்கிறார். மேலும் எங்களிடம் ஒரு ஆழமான பேட்டிங் வரிசை உள்ளது, அதனால் இனி வரும் போட்டிகளில் எங்களில் சிறந்ததைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.