WPL 2025: சோஃபி எக்லெஸ்டோன் அபாரம்; சூப்பர் ஓவரில் ஆர்சிபியை வீழ்த்தியது யுபி வாரியர்ஸ்!

Updated: Mon, Feb 24 2025 23:35 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்ய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் டேனியல் வையட்டுடன் இணைந்த எல்லிஸ் பேர்ரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த டேனியல் வையட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 8 ரன்னிலும், கனிகா அஹுஜா 5 ரன்னிலும், ஜார்ஜியா வெர்ஹாம் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 90 ரன்களைக் குவித்தார்.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. வாரியர்ஸ் தரப்பில் சினெல்லே ஹென்றி, தீப்தி சர்மா மற்றும் தஹ்லியா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையடைய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய கிரண் நவ்கிரே 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, விருந்தா தினேஷும் 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தஹ்லியா மெக்ராத்தும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 50 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் இணை ஒரளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தீப்தி சர்மா 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிரேஸ் ஹேரிஸ் 8 ரன்களிலும், உமா சேத்ரி 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் அணியின் நம்பிக்கையாக இருந்த செஹ்ராவத்தும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 

 இறுதியில் சினெல்லே ஹென்றி 8 ரன்னிலும், சைமா தாக்கூர் 14 ரன்னிலும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், கிம் கார்த் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் இப்போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. 

சூப்பர் ஓவர்

பின்னர் சூப்பர் ஓவரில் யுபி வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சினெல்லே ஹென்றி மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இணை களமிறங்கினர். ஆர்சிபி தரப்பில் கிம் கார்த் சூப்பர் ஓவரை வீசினார். இதில் சினெல்லே ஹென்றி 4 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 6 பந்துகள் முடிவில் மொத்தமாகவே 8 ரன்களை மட்டுமெ சேர்த்தது. இதனால் ஆர்சிபி அணிக்கு சூப்பர் ஓவரில் 9 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

இதையடுத்து ஆர்சிபி அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ரிசா கோஷ் இணை பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், யுபி வாரியர்ஸ் தரப்பில் சூப்பர் ஓவரை வீசிய சோஃபி எக்லெஸ்டோன் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் ஆர்சிபி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை