மகளிர் டி20 உலகக்கோப்பை: பெத் மூனி அரைசதம்; தெ.ஆப்பிரிக்காவுக்கு 157 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அலிசா ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடி 2 சிச்கர், 2 பவுண்டரி என 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கிரேஸ் ஹாரிஸ் மற்றும் கேப்டன் மெக் லெனிங் ஆகியோர் தலா 10 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டு முறை அரைசதம் கடந்த முதல் வீராங்கனை எனும் சாதனையைய்யும் பெத் மூனி படைத்தார். தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 53 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்சர் என 74 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷனைம் இஸ்மையில், மரிசேன் கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.