மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா; மகுடம் சூடப்போவது யார்?

Updated: Sun, Feb 26 2023 10:34 IST
Image Source: Google

மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவுநடைபெற்ற 2ஆவது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா.

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி. ஆடவர் கிரிக்கெட்டில் அந்நாட்டு அணி ஒருமுறை கூட உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் தற்போது மகளிர் அணி அந்த உயர்நிலையை எட்டியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேப்டவுன் நகரில் இன்று மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி. இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது. கடந்த ஒரு வருடமாகவே தென்ஆப்பிரிக்க அணி சீரான முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது. கடந்தஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையில் அரை இறுதி வரை முன்னேறிய நிலையில் தற்போது முதன்முறையாக டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் ஜோடி இந்த தொடரில் பேட்டிங்கில் சிறந்த தொடக்க வீராங்கனைகளாக வலம் வருகின்றனர். இவர்களுடன் ஆல்ரவுண்டர் மரிசானும் பலம் சேர்ப்பவராக திகழ்கிறார். வேகப்பந்து வீச்சில் ஷப்னம் இஸ்மாயில், அயபோங்கா காகா கூட்டணி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும்.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை வெற்றிகரமான அணியாக இருந்து வரும் ஆஸ்திரேலியா, தங்கள் ஆதிக்கத்தை தொடர்வதில் முனைப்பு காட்டக்கூடும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 7ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா வென்றிருந்தது. எனினும் இறுதிப் போட்டி என்பதால் நடப்புசாம்பியனான ஆஸ்திரேலியா எச்சரிக்கையுடன் செயல்படக்கூடும்.

அணியின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதை எட்டக்கூடிய திறன் அந்த அணிக்கு உள்ளது. 5 முறை அந்தஅணி மகுடம் சூடியதில் இருந்தே இதை அறியலாம். அரை இறுதி ஆட்டத்தில் கடைசி ஐந்து ஓவர்களில் இந்தியாவுக்கு 39 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, ஆனால்ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையை கைவிடவில்லை, மைதானத்தில் 100 சதவீத திறனை வெளிப்படுத்தி ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி வெற்றி கண்டது. 

விஷயங்கள் தங்கள் வழியில் நடக்காதபோதும் சாம்பியன் அணி வெற்றிக்கான வழியைக் கண்டுபிடிக்கின்றன, அதற்கு பெயர் பெற்றதுதான் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதனால் அந்த அணி மீண்டும் ஒரு முறை கோப்பையை தங்களது கைகளில் ஏந்துவதற்கு முழு அளவில் ஆயத்தமாக களமிறங்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை