உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. அதேபோல் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 52.77 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 55 சதவீதத்துடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
அதேசமயம் இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் 50 சதவீத புள்ளிகளுடன் 3,4 மற்றும் 5 இடங்களில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து 36.66 சதவீதத்துடன் பாகிஸ்தான் அணி 6ஆம் இடத்திலும், 33.33 சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 இடத்திலும் உள்ளன. அதேசமயம் இந்திய அணிக்கெதிரான இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி 25 சதவீதத்துடன் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிரான தோல்வியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்திற்கு சறுக்கியது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் இத்தொடரில் மீதம் 3 போட்டிகள் உள்ள நிலையில் இந்திய அணி தொடரின் முடிவில் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.