WTC 2023 Final: ஆஸிக்கு தண்ணி காட்டும் ரஹானே, ஷர்துல் இணை!

Updated: Fri, Jun 09 2023 17:22 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அலெக்ஸ் கேரி 48 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். ஆஸி, கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 13 ரன்களில் வெளியேறினார். சட்டேஷ்வர் புஜாரா 14 ரன்களிலும், விராட் கோலி 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவிற்கு தொடக்க ஓவரிலேயே கேஎஸ் பரத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் அடிமேல் அடி வாங்கி வலது கையில் காயமடைந்த நிலையில் வலி மாத்திரை எடுத்துக் கொண்டார். அதன்பின் ரஹானேவுடன் இணைந்து அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்ந்தது.

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ரஹானே சிக்சர் அடித்து தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய இந்திய அணியின் நம்பிக்கையும் அதிகரித்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு தண்ணிக்காட்டினர்.   

இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 209 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடவுள்ளது.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை