WTC 2023: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Jun 11 2023 17:15 IST
WTC 2023 Final: Australia a roaring victory in the ICC World Test Championship 2023 Final! (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் ஜடேஜா ஓவரில் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் எடுத்த ஸ்மித், 2ஆவது இன்னிங்ஸில் 34 ரன்களில் வெளியேறினார். இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2அவது இன்னிங்ஸில் 18 ரன்களில் வெளியேறினார். 

இறுதியாக 3ஆவது நாளில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் லபுஷாக்னே மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், லபுஷேன் 41 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு க்ரீன் 25 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் பவுண்டரியாக அடிக்க ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவித்தது. 

இதில், ஸ்டார்க் 7 பவுண்டரிகள் உடன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 5 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 270 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக மொத்தமாக 443 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் இந்திய அணிக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 18 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில் மூன்றாம் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 27 ரன்களை எடுத்திருந்த சட்டேஷ்வர் புஜாராவும் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - அஜிங்கியா ரஹானே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இன்ற் தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில்  விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 49 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலாண்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே - கேஎஸ் பரத் இணை ஓரளவு தாக்குப்பிடித்தனர். ஆனால் 46 ரன்களில் ரஹானே ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷர்து தாக்கூர ரன்கள் ஏதுமின்றியும், உமேஷ் யாதவ் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கேஎஸ் பரத்தும் 23 ரன்களை எடுத்த நிலையில் நாதன் லையன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் சிராஜின் விக்கெட்டையும் நாதன் லையன் கைப்பற்றினார். 

இதனால் இந்திய அணி இரண்டாவத இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலாண்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை