WTC 2023 Final: ஹெட், ஸ்மித் அபாரம்; வலிமையான நிலையில் ஆஸி!

Updated: Thu, Jun 08 2023 02:32 IST
Image Source: Google

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அடன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இதில் உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷாக்னே, டேவிட் வார்னருடன் கைகோத்து பொறுமையாக விளையாடினார். 

இதில் அரைசதம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த டேவிட் வார்னர் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 26 ரன்களை எடுத்திருந்த மார்னஸ் லபுஷாக்னே முகமது ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருபக்கம் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை