WTC 2023 Final: சதமடித்த ஸ்மித்; கம்பேக் கொடுத்த இந்தியா!

Updated: Thu, Jun 08 2023 17:17 IST
WTC 2023 Final: Team India claims four wickets and heads into lunch with momentum on their side! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததது. 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா ரன்கள் ஏதுமின்றியும், மார்னஸ் லபுசாக்னே 26 ரன்களிலும், டேவிட் வார்னர் 43 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் - டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டனர். 

இதனால் முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது 31ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 163 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து 121 ரன்களை குவித்து இந்திய அணியை அச்சுறுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க்கும் 5 ரன்களுக்கு ரன் அவுட்டாகினார். 

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை