உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. கடந்த ஜூன் 18ஆம் தேதியே நாடைபெற வேண்டிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம், மழை காரணமாக டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியும் ஆரம்பம் முதலே தடுமாறியது. இதற்கிடையில் நான்காம் நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் நிச்சயம் இப்போட்டி டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்றவாறு நியூசிலாந்து அணியுன் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 32 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இந்திய அணியின் கனவை சுக்குநூறாக்கினர். இதனால் ரீசர்வ் டேவான 6ஆவது நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னரே இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் - டேவன் கான்வே இணை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை அசால்டாக எதிர்கொண்டது.
அதன்பின் பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் குறுகிய இடைவேளையில் அவர்களை வெளியேற்றி இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனால் அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் இணை இந்திய அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த இணை ஒரு பக்கம் விக்கெட் இழப்பை தடுத்தும், மறுபுறம் பவுண்டரிகளில் ரன்களைச் சேர்த்தியும் அசத்தியது. இதில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இதனால் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்து அணி வெல்லும் முதல் ஐசிசி கோப்பையாகவும் இது அமைந்துள்ளது.
இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தண்டாயுதமும், ரூ.11 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.