450 ரன்கள் இலக்காக இருந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் - ஷர்துல் தக்கூர்!

Updated: Sat, Jun 10 2023 12:40 IST
WTC Final: We Can Chase 450 Or More, Says Shardul Thakur (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கை ஓங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவிக்க, தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 

தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 296 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. நேற்று இந்திய அணியின் பேட்டிங்கில் விக்கெட்டுகள் மல மலவென்று சரிந்த பொழுது, எட்டாவது விக்கெட்டுக்கு ரகானே மற்றும் சர்துல் தாகூர் இருவரும் ஜோடி சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார்கள்.

நேற்றைய நாள் ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ஷர்துல் தாக்கூர் “கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. ஐசிசி இறுதிப் போட்டியில் இதுதான் நல்ல இலக்கு என்று எதையும் சொல்ல முடியாது. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் 450 ரன்களையும் எட்டி வெற்றி பெறலாம். கடந்த ஆண்டு இங்கிலாந்து ஏறக்குறைய 400 ரன்கள் துரத்தி வெற்றி பெற்றதை நாங்கள் இங்கு பார்த்தோம். மேலும் அவர்கள் அதற்காக அதிக விக்கெட்டுகளையும் இழக்கவில்லை. எனவே இது எங்களுக்குச் சாதகமான அறிகுறி.

அவர்கள் போர்டில் எந்த ஸ்கோரை வைத்தாலும் அதை வைத்து ஆட்டத்தை இப்பொழுது முடிவு செய்ய முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்குள் மாறுவதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். எனவே நாங்கள் நம்பிக்கையுடன் இருக்க விரும்புகிறோம். ரஹானே சீனியர் வீரர். அவர் நிறைய விளையாடி உள்ளார். நாங்கள் விளையாடும்போது அவர் என்னிடம் ‘நான் தவறு செய்தாலும் நீங்கள் என்னிடம் வந்து கூறுங்கள். நாம்தான் கடைசி பேட்ஸ்மேன்கள் என்பதால் என்னிடம் பேசுங்கள். எனவே நாம் எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறோமோ அது அணிக்குப் பலன் கொடுக்கும்’என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை