மெக்கல்லம், நிஷங்காவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்தவகையில் இந்த தொடரில், இளம் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், இங்கிலாந்து தலைமை பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடைய சாதனைகளை தகர்த்து புதிய சாதனையை படைக்க முடியும். மேற்கொண்டு இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரரான பதும் நிஷங்காவையும் ஜெய்ஸ்வால் பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் அதிக ரன்கள்
இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் 60.76 சராசரியில் 1033 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் அதிக ரன் எடுத்த இலங்கையின் பதும் நிஸ்ஸங்கவை விட 102 ரன்கள் பின்தங்கி உள்ளார். நிஸ்ஸங்க 23 போட்டிகளில் 1,135 ரன்களை எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் குசல் மெண்டிஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
குசால் மெண்டிஸ் இந்த ஆண்டு 32 போட்டிகளில் விளையாடி 31.74 சராசரியுடன் 1,111 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பதும் நிசாங்கவும், குசால் மெண்டிஸும் இருவரும் நிச்சயம் விளையாடுவார்கள். இதனால் அவர்களை முந்தி யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் சாதனையை படைப்பாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மெக்கல்லம், ஸ்டோக்ஸை முந்தூம் வாய்ப்பு
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 74 என்ற சிறந்த சராசரியுடன் 740 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 26 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், டெஸ்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு விளையாடிய 9 போட்டிகளில் 33 சிக்ஸர்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக உள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கொண்டு 8 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில் பிராண்டன் மெக்கல்லமின் சாதனையை முறியடிப்பதுடன் புதிய வரலாற்று சாதனையையும் நிகழ்த்துவார். அதேசமயம், ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸர் அடித்தால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை முந்துவார். கடந்த 2022ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் 26 சிக்ஸர்களை விளாசிய நிலையில், அதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.