ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Advertisement

அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களையும், ரிஷப் பந்த் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையாகி வருகிறது. 

அதன்படி பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் புல் ஷாட் ஆட முயன்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்தை தவறவிட அது அலெக்ஸ் கேரியிடம் தஞ்சமடைந்தது. மேலும் பந்து பேட்டரை தாண்டிய சமயத்தில் சற்று நின்று வந்தது போல் தெரிந்ததன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் என அப்பில் செய்தனர். ஆனால் கள நடுவர் அதற்கு அவுட் தர மறுத்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்றாம் நடுவரிடம் முறையீடி செய்தனர். 

அப்போது மூன்றாம் நடுவர் காணொலியை சோதித்த சமயத்தில் பந்து ஜெய்ஸ்வாலின் கையுறையில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் எந்தவிதமான அதிர்வுகளும் தெரியவில்லை. ஆனால் பந்து ஜெய்ஸ்வாலின் கையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றதுபோல் காணொளியில் இருந்ததால் மூன்றாம் நடுவர் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனால் ஏமாற்றமடைந்த ஜெய்ஸ்வால் கள நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதனையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது சர்ச்சையான உருவானதையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பலரும் ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News