ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதில் ஆடவர் பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், இலங்கை அணியின் பதும் நிஷங்கா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இந்நிலையில் வாக்குகளின் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசியதுடன், மொத்தமாக இத்தொடரில் 712 ரன்களைச் சேர்த்தார். அதுமட்டுமின்றி இத்தொடரில் மொத்தமாக 26 சிக்சர்களையும் ஜெய்ஸ்வால் விளாசி சாதனை படைத்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மகளிர் வீராங்கனைகளுக்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், ஐக்கிய அரபு அமீரக அணியின் வீராங்கனைகளான கவிஷா எகொடகே மற்றும் ஈஷா ஓசா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் வாக்குகள் அடிப்படையில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் அனபெல் சதர்லேண்ட் பிப்ரவரி மதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.