இந்திய கிரிக்கெட் அரசியலால் சஹா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் - சையத் கிர்மானி
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா. இந்திய அணியில் தோனி இருந்ததால் அவருக்கு ரிதிமான் சஹாவுக்கு டெஸ்ட் அணியில் பிரதான இடம் கிடைக்கவில்லை. தோனி 2014ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்து ரிதிமான் சஹா விளையாடினார்.
ஆனால் காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. ரிஷப் பந்த் அணிக்குள் வந்தபிறகு, ரிதிமான் சஹாவின் வாய்ப்பு குறைந்தது . விக்கெட் கீப்பிங்கை பொறுத்தமட்டில் ரிதிமான் சஹா தான் சிறந்த விக்கெட் கீப்பர். விக்கெட் கீப்பிங் திறமையில் ரிதிமான் சஹாவின் பக்கத்தில் கூட ரிஷப் பந்தால் வரமுடியாது.
ஆனால் அவரது பந்தின் அதிரடியான பேட்டிங் மற்றும் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டெஸ்ட் அணியில் அவர் முதன்மை விக்கெட் கீப்பராக இடம்பிடித்தார். காலப்போக்கில் விக்கெட் கீப்பிங் திறமையையும் வளர்த்துக்கொண்டார்.
எனவே ரிஷப் பந்த் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட, தற்போது ரிதிமான் சஹாவை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்ட இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இலங்கைக்கு எதிராக அடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இஷாந்த் சர்மா மற்றும் ரிதிமான் சஹா ஆகிய 2 சீனியர் வீரர்களையும் ஓரங்கட்ட இந்திய அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஹானே, புஜாராவின் இடங்களும் சந்தேகம் தான்.
இந்நிலையில், ரிதிமான் சஹா குறித்து பேசிய சையத் கிர்மானி, “விருத்திமான் சஹா தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங்கால் அவர் அணியில் இடம்பிடித்தார். 37 வயதிலும் சஹா தான் சிறந்த விக்கெட் கீப்பர்.
அவர் அப்செட்டாகிவிடக்கூடாது. அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவர் எந்த க்ரூப்பையும் சார்ந்தவர் இல்லை என்பதால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அரசியலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ரிதிமான் சஹா. ஆனால் நான் என்றென்றும் சிறந்த விக்கெட் கீப்பராக அவரைத்தான் நினைவில் கொள்வேன் ” என்று தெரிவித்தார்.