குடும்பத்துடன் தோனியை சந்தித்த பதிரானா!
சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிராணா. ஜூனியர் மலிங்கா என்று கொண்டாடப்படும் இவர், சென்னை அணியின் புதிய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்துள்ளார். நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பதிராணாவுக்கு தோனி அளித்து வரும் ஆதரவு ரசிகர்களையும் மிரள வைத்துள்ளது.
பதிராணா தோளில் கைப்போட்டு தோனி ஆலோசனை கூறியதே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில், அவருக்காக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதிராணாவின் கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றும் தோனி ஆலோசனை கூறியுள்ளார். இதனால் சென்னை அணியில் நீண்ட காலத்திற்கான வீரராக பதிராணா இருக்கப் போவது உறுதியாகியுள்ளது.
இதனிடையே குவாலிஃபையர் முதல் போட்டிக்கு பின் பதிராணாவின் தாய், அவரை கட்டிபிடித்து பாராட்டிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் பதிராணாவின் பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினரை சென்னை அணியின் கேப்டன் தோனி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து பதிராணாவின் சகோதரி விஷுகா பதிராணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மதீஷா பதிராணா பாதுகாப்பானவர்களிடம் இருக்கிறார் என்பதை உணர்ந்துள்ளோம். நீங்கள் பதிராணாவை பற்றி எந்த கவலையும் பட தேவையில்லை. அவர் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என்று தல தோனி கூறியுள்ளார். இதுபோன்ற தருணங்கள் நாங்கள் கனவில் கூட கண்டதில்லை என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.