ராவி சாஸ்திரி போல் டிராவிட் ஒருபோதும் பேச மாட்டார் - கவுதம் கம்பீர்!

Updated: Sun, Nov 21 2021 21:19 IST
Image Source: Google

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.

ரவி சாஸ்திரியின் பயிற்சியில், இந்திய அணி 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அரையிறுதி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என கடைசி வரை முன்னேறி, முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்புகளை இழந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது, இங்கிலாந்து மண்ணில் வெற்றி, டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் முதலிடம், வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களில் வெற்றி என பல வெற்றிகளை பெற்று இந்திய அணி ரவி சாஸ்திரியின் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஐசிசி டிராபியை ஜெயிக்கவில்லை என்பது விமர்சனமாக இருந்தது.

அதுதொடர்பான கேள்வியை கேட்கும்போதோ அல்லது இந்திய அணி மீதான விமர்சனங்கள் எழும்போதோ, இதுதான் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த அணி, வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்த சிறந்த டிராவலிங் அணி என்று இந்திய அணியை ரவி சாஸ்திரி வெகுவாக புகழ்ந்து பேசியிருக்கிறார்.

அதுமாதிரியான தற்பெருமை பேச்சுகளை விரும்பாத கவுதம் கம்பீர், ரவி சாஸ்திரியை கடுமையாக விளாசியுள்ளார். 
இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், “நாம் நன்றாக ஆடும்போது நாமே பெருமையாக பேசக்கூடாது. அதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது. நாம் நன்றாக ஆடுகிறோம் என்பதை வெளியில் இருந்து மற்றவர்கள் தான் பாராட்டி பேசவேண்டும். 2011 உலக கோப்பையை வென்றபோது, அணியில் ஆடிய ஒருவர்கூட, நாங்கள் சிறந்த அணி என்றெல்லாம் பேசவில்லை.

ஒரு அணி ஜெயிக்கும்போது அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டும். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது பெரிய சாதனைதான்; அதில் சந்தேகமும் இல்லை. இங்கிலாந்தில் ஜெயித்தீர்கள். ஆனால் அதையெல்லாம் மற்றவர்கள் பாராட்டி பேச வேண்டும். நீங்களே(ரவி சாஸ்திரி) பெருமையாக பேசக்கூடாது. 

Also Read: T20 World Cup 2021

ராகுல் டிராவிட்டிடமிருந்து நீங்கள் ஒருபோதும் அதுமாதிரியான ஸ்டேட்மெண்ட்டுகளை கேட்கமுடியாது. இந்திய அணி நன்றாக ஆடினாலும், மோசமாக ஆடினாலும், ஒரேமாதிரியாகத்தான் பேசுவார் ராகுல் டிராவிட். பயிற்சியாளரின் பேச்சு வீரர்களிடமும் பிரதிபலிக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை