தோனியுடனான நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்த ஷுப்மன் கில்!

Updated: Sat, Nov 19 2022 17:50 IST
'Your debut was better than mine': Shubman Gill reveals how MS Dhoni cheered him up after disappoint (Image Source: Google)

இந்திய அணியின் எதிர்காலத்தின் முக்கியமான இளம் வீரராக அறியப்படும் ஷுப்மன் கில் 2019ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியிலும், 2020ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிகளிலும் அறிமுகமானார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 579 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் சராசரி 57.9 ஆகும். இதில் 3 அரைசதம், 1 சதம் அடங்கும். அதிகபட்சமாக 130 ரன்களை எடுத்துள்ளார். 

அதேபோல் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு அரைசதங்களுடன் 579 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் இவர் தாற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். இத்தொடரின் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷுப்மன் கில், தோனி 2004இல் வங்க தேசத்திற்கு எதிராக ரன்னேதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகியிருப்பார் என்பதை நினைவு கூறி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான எனது முதல் ஒருநாள் போட்டியில் நான் 21 பந்துகளில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தேன்.  எனக்கு அப்போது 18-19 வயதிருக்கும் . மிகவும் கவலையாக உட்கார்ந்திருந்தேன்.அப்போது வந்த எம்எஸ் தோனி என்னிடம், “உனது முதல் போட்டி என்னை விட சிறப்பானதாகவே இருந்தது” என்றார். 

எனக்கு சிரிப்பு வந்தது. அவருடைய முதல் போட்டி ஒரு பந்தும் விளையாடாமல் ரன் ரவுட் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். தோனியின் இந்த செயல் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. சோகத்தில் இருந்து மகிழ்ச்சி திரும்பியது” என்று தெரிவித்தார். இவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை