இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? பாலாஜி & ஜாகீர் இடையே கடும் போட்டி!

Updated: Wed, Jul 10 2024 17:10 IST
Image Source: Google

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று இந்திய அணி சாம்பியன் ஆன டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கொண்டு இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயல்பட்ட அபிஷேக் நாயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு கௌதம் கம்பீரும் அபிஷேக் நாயரின் பெயரை பரிந்துரைத்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதேசமயம் இந்திய அணியின் அடுத்த பந்துவீச்சு பயிற்சியாளர் யார் என்பதற்கு கடும் போட்டி நிலவி வருவதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் லக்ஷ்மிபதி பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லக்ஷ்மிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம், வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இதிலிருந்து யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை