ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்துமுடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது.
அதன்பின் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 19 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வந்த மற்றொரு தொடக்க வீரர் அனமுல் ஹக் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்மதுல்லா 39 ரன்களில் விக்கெட்டை இழந்ததுன், 76 ரன்களைச் சேர்த்திருந்த அனமுல் ஹக்கும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதத்தையும் பதிவுசெய்தார். ஆனால் பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 50 ஓவர்கள்ள் மிடுடிவில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஃபிஃப் ஹொசைன் 85 ரன்களைச் சேர்த்தார்.