ZIM vs IND, 3rd ODI: சிக்கந்தர் ரஸாவின் சதம் வீண்; ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

Updated: Mon, Aug 22 2022 21:10 IST
Image Source: Google

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடிவருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும்  வெற்றி பெற்று  இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் இந்த போட்டியிலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் மந்தமாக தொடங்கினர். இருவரில் ஒருவர் கூட அதிரடியாக ஆடவில்லை. ராகுல் 46 பந்தில் 30 ரன்கள் மட்டுமே அடித்தார். 68 பந்துகள் பேட்டிங் விளையாடி ஷிகர் தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய ஷுப்மன் கில் மற்றும் 4ஆம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், இஷான் கிஷன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன்பின்னரும் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பின்னரும் அடித்து விளையாடி 30 ரன்களை சேர்த்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் 97 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 130 ரன்களை குவித்தார். அவரது அதிரடி சதத்தால் இந்திய 50 ஓவரில் 289 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் இன்னசெண்ட் கையா, கைடானோ, முன்யோங்கா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சகாப்வா 16, ரியான் பார்ல் 8, லுக் ஜோங்வா 14 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா சதமடித்து இறுதிவரை போராடினார். பின் அவரும் 115 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்த களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர்.

இதனால் 49.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை