ZIM vs IRE, 1st ODI: பென்னட் அபார ஆட்டம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் பென் கரண் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் பென்னெட்டுடன் இணைந்த கேப்டன் கிரேய்க் எர்வினும் சிறப்பாக செயல்பட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய பிரையன் பென்னெட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய எர்வினும் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்த நிலையில், எர்வின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சிகந்தர் ரஸா 8 ரன்னிலும், வெஸ்லி மதவெரே 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரைன் பென்னெட் 20 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 169 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்களைக் குவித்துள்ளது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும், ஜோஷுவா லிட்டில், கிரஹாம் ஹூம், ஆண்டி மெக்பிரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.