ZIM vs IRE, 1st T20I: சிக்கந்தர் ரஸா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பால் ஸ்டிர்லிங் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டி பால்பிர்னிஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஹாரி டெக்டர் 24 ரன்களையும், கரேத் டெலானி 26 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ரஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மருமணி ஒரு ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான வெஸ்லி மதவெரே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்த நிலையில், 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் நகரவா- குவாண்டு இணை கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ய உதவினர்.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸின் கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிக்கந்தர் ரஸா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.